Home / Hardware / இலகுவாக கம்பியூட்டர் ப்ரோக்ரம்மிங் கற்றுக் கொள்ள micro:bit

இலகுவாக கம்பியூட்டர் ப்ரோக்ரம்மிங் கற்றுக் கொள்ள micro:bit

சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கணினியைப் பயன்படுத்த ஒரு சிலர் மாத்திரமே அறிந்திருந்தனர். ஆனால் தற்போது கணினி பயன்பாடு என்பது ஒரு சாதாரண விடயமாகப் மாறியிருக்கிறது. அதேபோல் கணினி செய்நிரலாக்கல் (Computer programming)  என்பதும் மென்பொருள் விருத்தியாளர்களின் திறமையாகப் பார்க்கப்பட்டது ஆனால் தற்போது செய்நிரலாக்க மொழி ((programming  language) பயன்பாடும் ஒரு சாதாரண  விடயமாக மாறி வருவதைக் காணலாம்.

மேற்கத்திய நாடுகளில் கணினி செய்நிரலாக்கம் பற்றிப் பாடசாலைக் கல்வியில் ஆரம்பப் பிரிவுகளிலேயே போதிக்கப்படுகின்றன. அத்துடன் கணினி செய்நிரலாக்கத்தில் மாணவரகளின் ஆரவத்தைத் துண்டவும் கணினி செய்நிரலாக்கத்தை மேலும் இலகுவாக்கவும் பல்வேறு யுக்திகளையும் அவர்கள் கையாள்கின்றனர்.

அந்த வகையில் பாடசாலை மாணவர்களிடத்தில் கணினி செய்நிரலாக்கல் மொழித் திறனைக் கற்றுக்கொள்ள மாணவர்களை  ஊக்குவிக்கும் நோக்கில் ஐக்கிய ராஜ்யத்தில் BBC நிறுவனத்தால் அறிமுகப்படுத்திய ஒரு திட்டமே (micro:bit) மைக்ரோ :பிட்.

மைக்ரோ:பிட் என்பது சட்டைப் பை அளவிலான ஒரு  சிறிய கணினி ஆகும்.  பார்வைக்கு மைக்ரோ பிட் என்பது ஒரு மின் சுற்றுப் பலகை (Circuit Board) போன்றிருக்கும். இதன் பரிமாணம்  4 ×5 செ.மீ அளவினைக் கொண்டது.  2016 ஆண்டு பீபிசி நிறுவனம் மேலும் பல நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 7 ம் ஆண்டில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாகவே இந்த மைக்ரோ:பிட்  கணினிகளை வழங்கியது.

மைக்ரோ பிட் அட்டையை ஒரு கணினி என்பதை விட  மைக்ரோ  கண்ட்ரோலர் (Micro Controller) என அழைப்பதே பொருத்தமானது. மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் எமது சூழலிலுள்ள பல்வேறு வகையான மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்த முடிவதோடு அவை தன்னியக்க முறையில் சுயமாக  இயங்கவும்  உதவுகிறது.  மேலும் அவற்றை இணையத்தோடு தொடுக்கவும் முடிகிறது. இவ்வாறு சூழலிலுள்ள பல்வேறு வகையான மின்னணு சாதனங்களைக இணையத்தோடு  இணைப்பதையும் அவற்றிற்கிடையே தொடர்பாடலை உருவாக்குவதையும் பொருட்களின் இணையம்  IOT (Internet of Things) என அழைக்கப்படுகிறது.

Raspberry Pi, Orange Pi என சிறிய வகை கணினிகள் பற்றியும் நீங்கள் ஒரு வேளை அறிந்திருக்கலாம்.   இவற்றிற்கு விசைப்பலகை, மவுஸ், மொனிட்டர்  என்பவற்றை  இணைக்கும் போது ஒரு முழுமையான கணினியாகத் தொழில் படும்.  இவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகள் இருந்தாலும்  பயன் படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில்  மைக்ரோ பிட்  பெருமளவில்  மாறுபட்டது.

மைக்ரோ பிட்டின் வருகைக்கு முன்னர்  ஏற்கனவே ஆர்டுயினோ (Arduino) எனும்   மைக்ரோ கண்ட்ரோலர் பயன் பாட்டில் இருந்து வருகிறது.  எனினும் ஆர்டுயினோவை விடவும் இந்த மைக்ரோ பிட் பல வகையில் மேம்பட்டதாகவும் செய்நிரலாக்கலில் இலகுவான வழி முறைகளும் பின் பற்றப்படுகின்றன.

ஒரு  ஆரம்ப நிலை மைக்ரோ பிட் பொதியில்  (Micro:bit starter Kit) மைக்ரோ:பிட் மைக்ரோ கண்ட்ரோலர் அட்டையூ.எஸ்.பி கேபிள் மற்றும் பேட்டரி என்பவை அடக்கம்.  இலங்கையில் இதன் விலை  ரூபா 3500

மைக்ரோ பிட்டைப் பயன் படுத்தி ஏராளமான புதிய கருவிகளை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உங்களிடம் இருக்கும், மின்னணு கருவிகளைக் கட்டுப்படுத்தவோ முடியும். உதாரணமாக ஒரு சலன உணரியைப் (motion sensor) பயன் படுத்தி இருளில் அந்நியர்களின் நடமாட்டத்தை உணரும் போது மின் விளக்குகள் ஒளிருமாரு அல்லது உங்கள் மொபைல் ஃபோனுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்புமாறு மைக்ரோபிட் கண்ட்ரோலரை செய்நிரல்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்க முடியும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று உங்கள் கற்பனைக்கு எட்டிய வரை சூழலிலுள்ள மின்னணு சாதனங்களைக் மைக்ரோபிட் மூலம் கட்டுப்படுத்தவோ புதிய சாதனங்;களை உருவாக்கவோ  முடியும்.

ஆரம்ப நிலையில் மைக்ரோபிட் அட்டையிலுள்ள  LED  விளக்குகளைப் பயன் படுத்தி இலக்கங்கள் எழுத்துக்களைக்  காட்சிப் படுத்துமாறு  எளிமையான செய்நிரல்களை உருவாக்க முடியும்.   அதன் பின்னர்  அதிலுள்ள உணரிகளைப்  பயன் படுத்தி சிக்கலான செய்நிரல்களை எழுதுவதன்  மூலம் ரோபோக்களையும்  கூட  உருவாக்கலாம்.

பல ஒருங்கிணைந்த தொகுதிகள் (integrated modules) மற்றும்  உணரிகள் (sensors) மைக்ரோபிட்டில்  உள்ளமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆர்முடுகள் மாணி (accelerometer), திசை காட்டி(compass), ஒளி உணரி, வெப்ப உணரி  என்பன அடக்கம். இவை மைக்ரோ:பிட் அட்டையின் முன்  பகுதியில் உள்ளமைக்கப்பட்டுள்ளன மேலும் ஒரு யூ.எஸ்.பி போர்ட், ஒரு மின் இணைப்பு மற்றும் மீட்டமை (reset button)  பட்டன்  என்பவற்றையும் காணலாம்.  மேலும் இது போன்ற பல்வேறு  உணரிகள் மற்றும்  புறச்சாதனங்களை  இணைப்பதற்கு 25 (Pin) பின்களும்   அட்டையின் விளிம்பில் உள்ளன.

பிபிசி மைக்ரோ பிட் அட்டையின் பின்புறத்தில்  5 × 5 LED விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.  இதனைப் பயன் படுத்தி  நகரும்  செய்திகளை (scrolling texts)  காண்பிக்க முடியும்  கணினி விளையாட்டுகள் மற்றும் ஒளி கலவைகளையும்  உருவாக்கலாம்.  மேலும் A,B என இரண்டு பட்டன்களும் அட்டையில் உள்ளன. அவற்றை  அழுத்துவதன்  மூலம் ஏதாவது நிகழ்வொன்றைச்  செயற்படுத்துமாறு செய்நிரல்களை எழுத  முடியும்.

இந்த அட்டையின் மிக முக்கியமான அம்சம் ப்லூடூத் ஸ்மார்ட் தொழில் நுட்பமாகும். இது ஸ்மார்ட் போன், டேப்லட் பிசி, டிவிடி பிளேயர் மற்றும் பல வீட்டு உபகரணங்கள் போன்ற சாதனங்களை  இணைக்க அனுமதிக்கிறது.

மைக்ரோ:பிட்  செய்நிரலாக்கத்தில் Microsoft MakeCode,  MicroPython,  Arduino IDE என  பல்வேறு  ஒன்றினைந்த  விருத்திச் சூழல்கள்  (IDE- Integrated Development Environment) பயன்பாட்டில் உள்ளன.

முதல் இரண்டு விருத்திச் சூழல்களை  (IDE) microbit.org   இணைய  தளத்தில் வெப் பிரவுசர் மூலமாகவே அணுக முடியும்.  ஆர்டுயினோ விருத்திச் சூழலை  arduino.cc வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Microbit.org தளத்தில்  (elementary level)  எளிமையான மட்டத்தில் சிறுவர்களைக்  கவரும் வன்ணம் கட்டளைகளைக்  கொண்ட  கட்டங்களை  (Blocks)  ட்ரேக் அண்ட் ட்ரொப் முறையில் மவுஸினால் இழுத்துப் போடுவதன் மூலமோ  அல்லது இடை மட்டத்தில் (mid-level) மைக்ரோசொப்ட் MakeCode மூலம்  ஜாவா ஸ்க்ரிப்ட்  (JavaScript ) மொழியைப் பயன்படுத்துவதன் மூலமோ செய் நிரல் எழுத  முடியும். தமிழ் மற்றும் சிங்கள் மொழிகளையும் செய் நிரலாக்கலில் பயன் படுத்தலாம் என்பது கூடுதல் வசதி

மேலும் இவ்விணைய பக்கத்தில் ஒரு மெய் நிகர் (Virtual) மைக்ரோ பிட் அட்டையையும் காணலாம். அதன் மூலம் உங்களிடம் மைக்ரோபிட் அட்டை இல்லாவிட்டாலும் செய் நிரலாக்கக் கட்டளைகள்  முறையாக இயங்குகிறதா என நிகழ் நேரத்தில்  சோதித்துப் பார்க்க முடியும்

உயர் மட்டத்தில் மைக்ரோ பிட் அட்டை நிரலாக்கத்திற்கு  மைக்ரோ பைத்தன்  (MicroPythonஎனும் மற்றுமொரு  விருத்திச் சூழல் (IDE)  பயன்படுத்துகின்றது.  மைக்ரோ பிட்டை நேரடியாக அணுகவும் செய்நிரல்களை  எழுதவும் ஸ்மார்ட்போனைக் கூட பயன் படுத்த முடியும்.

செய் நிரலாக்கத்தின் முடிவில் அக்  கட்டளைக்  குறியீடுகளை (Codings) டவுன் லோட் செய்து மைக்ரோ பிட் அட்டையைக் கணினியுடன் யூ.எஸ்.பீ போர்ட் மூலம் இணைத்து டவுன் லோட் செய்த ஃபைலை ஒரு பெண்ட்ரைவில் ஏற்றுவது போல்; மைக்ரோ பிட் அட்;டையினுள் நகல் செய்ய வேண்டும்.  அப்போது அக்கட்டளைகளை மைக்ரோ:பிட் அட்டை நிறைவேற்றுவதைக் காணலாம்.

இலங்கையிலும் மைக்ரோ பிட் பயன் பாட்டை ஊக்குவிக்குமுகமாக தன்னார்வமிக்க கணினி செய்நிரலாளர்களைக் கொண்டு  Micro:bit Sri Lanka User Group எனும் பெயரில் ஒரு குழுமம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தக் குழுமம் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள  பாடசாலைகள், கணினி  கற்கை நிறுவனங்கள்  மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில்  மைக்ரோபிட் செயலமர்வுகளை  (workshops)  நடாத்தி வருகிறது. நீங்களும் உங்கள் பாடசாலயில், கணினி கற்கை நிலையத்தில்  மைக்ரோபிட் செயலமர்வுகளை இவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்யலாம்.

இந்த குழுமத்தின் செயற்பாடுகள் பற்றிய மேலதிக விவரங்களை  http://microbitslug.org எனும் இணைய  தளத்தினூடாக அறிந்து கொள்ள முடியும். மைக்ரோபிட்  அட்டையைக் கொண்ட பொதியை இவர்களுடாகவே கொள்வனவு செய்யவும் முடியும்

மைக்ரோ பிட் மூலம் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான செயற் திட்டங்கள்   வீடியோ வடிவத்தில் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  அவற்றைப் பார்வையிடுவதன் மூலமும் மைக்ரோ பிட்  பற்றிய அறிவை இன்னும் விருத்தி செய்து கொள்ளலாம்.

Micro: Bit Specifications  விவரக்குறிப்பு

About admin

Check Also

Windows Sandbox வசதியை இயங்கச் செய்வது எப்படி?

விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என்பது விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Virtual machine ஆகும். நாம் தினமும் கணினியை பயன்படுத்தும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *