Home / What is..? / What is NFC?

What is NFC?

What is NFC? NFC என்பது குறுந்தூர பயன்பாட்டிற்கான கம்பியில்லா தொடர்பாடல் (வயர்லெஸ்) தொழிநுட்பமாகும்.  Near Field Communication என்பதன் சுருக்கமே NFC. இது மின்னணு சாதனங்களுக்கிடையே எளிய மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடலை வழங்குகிறது. இதனை ப்லூடூத் போன்ற பிற வயர்லெஸ் தொழில் நுட்பங்களுடனோ அல்லது இதே போன்ற NFC தொழிநுட்பம்  உட்பதிந்த பிறசாதனங்களுடனோ  இணைத்துப்  பயன்படுத்த முடியும்.

NFC இன் தொடர்பாடல் வீச்சு சுமார் 10 சென்டிமீட்டர் தூரமாகும். இருப்பினும், ஒரு அண்டெனாவை பயன் படுத்தி 20 சென்டிமீட்டர் தூரம்வரை நீடிக்க இயலும். இந்தக் குறுகிய எல்லை என்பது வேண்டுமென்றே (purposely) தீர்மானிக்கப்பட்ட விடயம்தான்.  ஏனெனில்  இதன் மூலம் மிக அருகாமையிலுள்ள  இரண்டு சாதனங்களுக்கிடையே மாத்திரம்  ஒன்றோடொன்று பாதுகாப்பாகத்  தொடர்பு கொள்ள முடிகிறது.   இதன் காரணமாகப் பண பரிவர்த்தனைகளுக்கும் NFC ஐ பொருத்தமான ஒரு தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.

இந்த NFC தொழிநுட்பத்தில் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செயற்பாடு மின்காந்த தூண்டல் மூலம் நடை பெறுகிறது. இந்த மின்காந்த தூண்டலில், காந்தப்புலத்தைப் பயன்படுத்தி மின் அலை உருவாக்கப்படுகிறது.

NFC தொழிநுட்பம் 106-424 Kbps தரவு பரிமாற்ற வேகத்தைக் கொண்டுள்ளது, மேலும், தரவு பரிமாறிக் கொள்ளும் திறன் 10 செமீ லும் குறைவாகும். இது புலூடூத் தொழிநுட்பத்தை விடக் குறைந்த வீச்சாக இருந்தாலும் NFC பயன் பாட்டின் நோக்கத்திற்கு இது போதுமானது. இரண்டு NFC சாதனங்கள் இணைக்க 0.1 வினாடிகளுக்குக் குறைவான நேரமே ஆகும்.

தற்போது, ​​NFC உலகம் முழுவதும் பல்வேறு பணிகளை எளிதாக்க பயன்படுகிறது. இவற்றில், NFC முக்கியமாகப் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கி அட்டையில் NFC இருந்தால், கார்ட் ரீடரில் ஒருமுறை கார்டைத் தட்டுவதன் மூலம் எளிதாகப் பணம் செலுத்தலாம். உங்கள் வங்கி அட்டை NFC தொழிநுட்பத்தை ஆதரிக்குமானால் ‘.)))’ இது போன்ற ஒரு அடையாளத்தை நீங்கள் காணலாம்.

பணம் செலுத்தும் கவுண்டர்களில் பணத்தையோ வங்கி அட்டைகளையோ தொடாமலேயே பணத்தை செலுத்தக்கூடிய வசதியையும் NFC தருகிறது. உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் NFC ஐ ஆதரிக்குமாக இருந்தால் Apple Pay, Google Pay போன்ற தொடுகையற்ற கட்டணம் செலுத்தும் (contactless payment) தெரிவுகளைச் செயற்படுத்த முடியும்.

உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்களையு Apple Pay, Google Pay போன்ற மொபைல்-பே (mobile pay) செயலிகளோடு இணைத்தபிறகு, NFC செயல்படுத்தப்பட்ட பணம் செலுத்தும்  இயந்திரத்தின் அருகே உங்கள் ஸ்மாட் ஃபோனை வைப்பதன் மூலம்  இலகுவாகப் பணத்தைச் செலுத்தலாம்.
(Apple Pay, Google Pay வசதிகள் இன்னும் இலங்கையில் இல்லை)

மேலே குறிப்பிட்டது NFC தொழில் நுட்ப பயன்பாட்டிற்கான ஒரு உதாராணம் மட்டுமே.

மேலும் சில உதாரணங்கள் கீழே தரப்படுகின்றன.

  • பஸ் அல்லது ரயில் போன்ற பொதுபோக்குவரத்தில் கட்டணம் செலுத்துதல்
  • ஒரு இசைக் கச்சேரி அல்லது விளையாட்டு நிகழ்வில் உங்கள் அனுமதிப் பத்திரத்தை (டிக்கட்டை) உறுதிப்படுத்துதல்
  • நீங்கள் ஒரு கடையில் நுழையும் போதே உங்கள் தொலைபேசியில் அக்கடையில் வழங்கப்படும் சிறப்பு சலுகையைப் பார்க்கும் வசதி
  • ஒரு பூங்காவில் நுழையும் போது அதன் வரைபடம் மற்றும் தொடர்புடைய தகவலைப் பார்க்கும் வசதி.
  • ஒரு உணவகத்தில் உள்ள உணவுப் பட்டியலை (மெனு) காண்பித்தல்
  • கதவில் பொருத்தியுள்ள NFC- செயற்படுத்தப்பட்ட பூட்டை திறத்தல் மூடுதல் என NFC பயன் பாட்டினை நீண்ட பட்டியலிட முடியும்.

NFC தொழில் நுட்பத்தை மேற்குறித்த வணிக நோக்கிலான தேவைகளுக்கு மாத்திரமன்றி எமது அன்றாட தேவைகளுக்கும் கூடப் பயன் படுத்தலாம்.

மேலும் NFC tags எனும் NFC Chip பதித்த ஸ்டிக்கர்களும் பயன் பாட்டில் உள்ளன. அவற்றில் நாம் விரும்பும் கட்டளைக் குறியீடுகளை அதற்கெனஉருவாக்கப்படுள்ள செயலிகள் மூலம் முன் கூட்டியே பதிவு செய்து எந்தவொரு NFC வசதியுள்ள கருவியினாலும் வாசித்தறிய முடியும். உதாரணமாக ஒரு இணைய தள முகவரியை என்.எஃப்.சி டேகில் பதிவு செய்து வைத்து அந்த டேகை என்.எப்.சி செயற்படுத்திய கருவியினருகே கொண்டு செல்லும் போது குறித்த இணைய தளத்தை அதன் முகவரியை பிரவுசரில் டைப் செய்யாமலேயே பார்வையிட முடியும்.

NFC தொழில் நுட்பத்தைப் பெரும்பாலும் QR குறியீடுகளுக்கு மாற்றீடாகக் கருதப்படுகிறது.  NFC மற்றும் QR இரு தொழில்நுட்பங்களும்  குறுகிய-வரம்பு செயற்பாடுகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. QR தொழில் நுட்பத்தில்  உங்கள் ஸ்மாட் கருவிமூலம் சதுர வடிவில் உள்ள குறியீட்டை ஸ்கேனிங் செய்ய வேண்டும். மேலும் QR குறியீடு ஸ்கேனிங்கிற்கு ஒரு கேமரா தேவைப்படுகிறது. அதேநேரத்தில் NFC தகவல் தொடர்புக்கு NFC Chip தேவைப்படுகிறது. எனினும், உங்கள் சாதனத்துடன் எதையும் கைமுறையாக ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் NFC தொடர்பு QR ஐ விட எளிமையாக உள்ளது. மேலும் என்.எஃப்.சி. இரு வழி (duplex) தொடர்பாடலை வழங்குகிறது, அதே சமயம் QR குறியீடு ஸ்கேனிங் என்பது ஒற்றை வழி (Simplex) தகவல் பரிமாற்றமாகும்.

உங்கள் ஸ்மாட் ஃபோனில் NFC தொழில் நுட்பம் இருக்குமாயின் ஃபோனின் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது அந்த ஃபோன் மாடலின் விவரக் கூற்றிலிருந்து (specifications) தெரிந்துகொள்ள முடியும். எனினும் தற்போது வெளியாகும் அனைத்து ஸ்மாட் ஃபோன்களிலும் NFC தொழில் நுட்பம் இணைக்கப்படிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. அண்ட்ராயிட் கருவிகளில் என்எஃப்சி வசதி உள்ளதா என்பதை settings > Connections > More connections settings இல் தட்டுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

What is NFC?

About admin

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply