Home / What is..? / What is Spyware ?

What is Spyware ?

Spyware என்றால் என்ன?

இணைய பயன்பாட்டின்போது வேகம் குறைந்து கணினி மெதுவாக இயங்குகிறதா? வெப் பிரவுஸரில் ஒரு முகவரியை டைப் செய்ய நீங்கள் விரும்பாத் வேறொரு தளத்தைக் பிரவுசர் காண்பிக்கிறதா? பிரவுசரில் அடிக்கடி பொப்-அப் (Pop-up) விளம்பரங்கள் தோன்றுகிறதா? உங்களை அறியாமலேயே பிரவுசரின் ஹோம்பேஜ் மாற்றப்பட்டுள்ளதா? சந்தேகமே வேண்டாம். உங்கள் கணினி ஸபைவேரால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதியாகசக் கூறலாம்.

ஸ்பைவேர் என்பது நீங்கள் அறியாமலேயே அல்லது உங்கள் சம்மதம் இல்லாமலேயே கணினியில் வந்து உட்கார்ந்து கணினியில் உங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு உங்கள் அந்தரங்க தகவல்களைச் சேகரித்து அதனை உருவாக்கியவருக்கு அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும் ஒரு தீங்கிழைக்கும் மென்பொருளாகும்.

இணையத்தில் உலாவும் போது யாரோ ஒருவர் ஸ்பைவேரைப் பயன்படுத்தி உங்கள் கணினியிலிருந்து ஏதோ ஒரு தகவலைப் பெற முயற்சிக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்

ஸ்பைவேர் கணினியில் மறைந்திருந்து உங்கள் அந்தரங்க தகவல்களை தீய சக்திகளின் கையில் போய் சேர்த்து விடுகிறது. உதாரணமாக இணையம் வழியே ஒரு பொருளைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு படிவத்தை நிரப்பும்போது உங்கள் பெயர் முகவரி,

வங்கிக் கணக்கு விவரம் மற்றும் கிரடிட் காட் விவரங்களை டைப் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஸ்பைவேர், கீபோர்டில் நீங்கள் டைப் செய்தவற்றைப் பதிவு செய்து தனது எஜமானருக்கு அனுப்பி வைக்கிறது.

.ஸ்பைவேர் என்பது ஒரு வைரஸ் அல்ல. அது கணினியைத் தாக்கும் நோக்கில் உருவாக்கப்படுவதுமல்ல. வைரஸ் போன்று கணினிக்கு கணினி பரவுவதுமில்லை கணினியிலிருந்து தகவல்களைத் திருடும் நோக்கிலேயே இவை உருவாக்கப்படுகின்றன. கணினியிலுள்ள முக்கிய ஆவணங்கள் படங்கள் வீடியோக்கள் போன்றவயும்கூட திருடப்படலாம்.

தினமும் ஏராளமான கணினிகள் ஸ்பைவேர்களினால் பாதிக்கப்படுகின்றன. இணையத்தில் இணைந்துள்ள 90 வீதமான கணினிகள் ஸ்பைவேரினால் பாதிக்கப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவை எத்தனை முறை நீக்கினாலும் திரும்பத் திரும்ப தானாவே நிறுவிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

இணையத்திலிருந்து ஏதேனும் ஒரு பைலை அல்லது மென்பொருளை டவுன்லோட் செய்யும் போது உங்களை அறியாமல் ஸ்பைவேரும் அவற்றோடு சேர்த்து உமது கணினியில் வந்து சேர்ந்து விடும். அனேகமான ஸ்பைவேர்கள் இலவசமாகக்க் கிடைக்கும் (Freeware) மென்பொருள்களில் இரகசியமாக இணைக்கப்பட்டிருக்கும்.

ஸ்பைவேர் கணினியைத் தாக்கியுள்ளது என எவ்வாறு அறிந்து கொள்வது.?

 • இணைய பயன்பாட்டின் போது கணினியின் வேகம் மந்தமடைதல்.
 • நீங்கள் அறியாமலேயே இணைய உலாவியின் ஹோம்பேஜ் மாறுதல்
 • கூகில், யாஹூ மற்றும் எமசோன் போன்ற தளங்களில் அளவுக்கதிகமாக பொப்-அப் விளம்பரங்கள் தோன்றல்.
 • இணைய தளமொன்றில் ஒரு லிங்கில் க்ளிக் செய்யும்போது நீங்கள் விரும்பாத வேறொரு தளத்தை உங்கள் பிரவுஸர் காண்பித்தல். இதனை பிரவுஸர் ஹைஜெக்கிங் (Browser Hijacking) எனப்படும்.
 • புக்மார்க் (Bookmark) எனப்படும் பிடித்த தளங்கள் உங்களை அறியாமல் மாற்றப்படும்
 • சில பொப்-அப் விளம்பரங்களில் உங்கள் பெயரைக் காண்பிப்பதோடு நீங்கள் இதுவரையில் செல்லாத ஒரு இணைய தளத்தைக் காண்பித்து நீங்கள் ஏற்கனவே அந்தத் தளத்தில் பதிவு செய்திருப்பதாகவும் காட்டும்.

உங்களுக்கு அறிமுகமில்லாதோரிடமிருந்து மின்னஞ்சல் வந்து சேரும். ஸ்பைவேர் போன்றே எட்வேர் (Adware) எனும் வார்த்தையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். எட்வேர் என்பதை ஸ்பைவேரின் நெருங்கிய சகா எனலாம். எனினும் இவை எமது அந்தரங்க தகவல்களைக் களவெடுப்பதில்லை. எட்வேர் பிரவுஸரில் பொப்-அப் விளம்பரங்களைத் தோன்றச் செய்வதற்காக உருவாக்கப்படுகின்றன. தோன்றும் விளம்பரங்களையெல்லாம் மூடிய பிறகே நீங்கள் விரும்பும் தளங்களைப் பார்க்க அனுமதிக்கும். எட்வெயர் உங்கள் இணைய செய்ற்பாட்டைக் கண்கானிக்கிறது. இணையத்தில் நீங்கள் அதிகம் பார்வையிடும் தளம் என்ன? உங்கள இணைய தேடல் எத்தகையது போன்ற விவரங்களை எட்வெயர் மென்பொருளை உருவாக்கியவருக்கு அனுப்பி வைக்கிறது. அத்துடன் பிரவுஸர் செட்டிங்ஸ்ஸையும் கூட மாற்றி விடுகிறது.. புதிய டூல்பார்களை நீங்கள் கேட்காமலேயே பிரவுஸரில் நிறுவி விடுகிறது. எட்வெயர் கூட நமக்குத் தொல்லையே தருவதுடன் நேரத்தையும் வீணடிக்கிறது.

எட்வேர் ப்ரோக்ரம்கள் சிறந்த முறையில் வடிவமைக்கப்படாதிருந்தால் கணினியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும்.. சில எட்வேர்கள் ந்மது அனுமதியுடனேயே கணினியில் நிறுவப்படும். உதாரணமாக இலவசமாகக் கிடைக்கும் சில மென்பொருள்களைப் பயன்படுத்தும்போது அதன் விண்டோவில் ஒரு சிறு பகுதியில் விளம்பரங்களைத் தோன்றச் செய்வார்கள். அந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்கியதும் விளம்பரத்தை நீக்கி விடுவார்கள்.

ஸ்பைவேரும் எட்வேரும் கணினிப் பயனர்களுக்கு குறிப்பாக இணைய பயனர்களுக்கு மிகப் பெரிய தலையிடிகளாகவுள்ளன. கணினியின் செயற்பாட்டில் ஒரு பகுதி இவ்வாறான மென்பொருள்களால் வீணடிக்கப்படுகின்றது. இணைய வேகத்தையும் குறைந்து விடுகின்றன. அத்தோடு மூன்றாவது நபரால் நமது கணினி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு நூற்றுக்கணக்கான எட்வேரோ அல்லது ஸ்பைவேரோ எமது கணினியை ஆக்கிரமிக்குமானால் கணினியின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

ஸ்பைவேரை எவ்வாறு தடுப்பது?

 • பயர்வோல் மென்பொருள் ஒன்றை நிறுவிக் கொள்ளுங்கள். இவை எம்மை அறியாமால் அல்லது எமது அனுமதியில்லாமல் இணையத்தின் வழியே கணினியில் நுழைய முயற்சிக்கும் தீய நோகம் கொண்ட மென்பொருள்களைத் தடுத்து நிறுத்தும். விண்டோஸ் இயங்கு தளத்துடனும் பயர்வோல் மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தி விடுங்கள்.
 • இயங்கு தளத்தை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளுங்கள். மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பாதுகாப்பை வழங்கும் அப்டேட் பைல்களை அவ்வப்போது வெளியிடுகின்றது. அவற்றை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
 • உங்கள் வெப் பிரவுஸரின் பாதுகாப்பு அளவை (Security Level) உயர்த்திக் கொள்ளுங்கள்.
 • ஸ்பைவேர் அகற்றும் கருவிகளை டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். ஏராளமான ஸ்பைவேர் கண்டறிந்து நீக்கக் கூடிய மென்பொருள் கருவிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. வைரஸ், ஸ்பாம், எதிர்ப்பு மென்பொருள் ஸ்பைவேர் நீக்கும் மென்பொருள் மற்றும் பயர்வோல் என அனைத்துமடங்கிய முழுமையான கணினிப் பாதுகாப்பை வழங்கக் கூடிய மென்பொருள் பொதிகளை நோட்டன், மெகாபே போன்ற நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இவற்றை விலை கொடுத்து வாங்கி கணினியில் நிறுவிக் கொள்ளுங்க:ள். இந்தக் கருவிகளை நிறுவிக் கொண்டால் மட்டும் போதாது. அதனை அடிக்கடி இயக்கி ஸபைவேர்களை முடிந்தளவு நீக்கிக் கொள்ள வேண்டும். ஸ்பைவேர்கள் கணினியிலிருக்குமெனெ சந்தேகித்தால் கிரடிட் கார்ட் விவரங்களை இணையம் வழியே வழங்க வேண்டாம்.  .
 • இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை டவுன்லோட் செய்யும்போது அவதானமாகச் செயற்படுங்கள். அவற்றை நிறுவ முன்னர் நன்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான தளங்களிலிருந்து மட்டும் மென்பொருள்களை டவுன்லோட் செய்யுங்கள்.
 • பொப்-அப் விண்டோக்களில் தோன்றும் ‘Yes’, ‘No’, ‘OK’ போன்ற பட்டன்களில் க்ளிக் செய்யாதீர்கள்.
 • அறிமுகமீல்லாத நபர்களிடமிருந்து வரும் ஸ்பாம் மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்கவோ  அவற்றிற்குப் பதிலளிக்கவோ வேண்டாம். 

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

What is NFT?

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் …

Leave a Reply