சிங்க்ரனைசேஷன் (Synchronization) எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கமே (சிங்க்) Sync எனப்படுகிறது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களில் உள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப்படுவதையே சிங்க்ரனைஸ் எனப்படுகிறது.
இரண்டு கணினிகளை Sync செய்தல் என்பது குறித்த ஒரு நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப் படுத்தப் படுவதைக் குறிக்கிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது.
உதாரணமாக நேற்று உங்கள் கணினியில் உள்ள சில ஃபைல்களை வேறொரு கணினியில் பிரதி செய்தீர்கள் என வைத்துக் கொள்வோம். இன்று உங்கள் கணினியில் உள்ள அதே ஃபைல்களுள் சிலவற்றை அழித்து விடுவதோடு புதிதாகச் சில ஃபைல்களையும் சேர்த்து விடுகிறீர்கள்.
இப்போது மறுபடியும் அதே ஃபைல்களை மற்றைய கணினியுடன் Sync செய்யும்போது இன்று அழித்த அதே ஃபைல்களை மற்றைய கணினியிலும் அழிக்கப்படுவதோடு புதிய ஃபைல்களும் சேர்க்கப் பட்டுவிடும்.
இப்போது சிங்க் வசதி மொபைல் கருவிகளிலும் கிடைக்கின்றன.
எடுத்துக்காட்டாக உங்களிடம் ஒரு கம்பியூட்டர், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டேப்லெட் என ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்கள் இருக்கும் பட்சத்தில், ஜிமெயில் கணக்கை மூன்று சாதனங்களிலிருந்தும் அணுகக்கூடியதாக இருந்தால் மூன்று சாதனங்களிலும் ஒரே தகவல் இருப்பதை Sync உறுதி செய்யும். கணினியிலிருந்துஒரு செய்தியை நீக்கும்போது, அது மொபைல் மற்றும் டேப்லெட்டிலிருந்தும் அது நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சில தினங்கள் ஏதோ ஒரு சாதனத்தைப் பயன் படுத்தாமலிருந்து மறுபடி அந்தச் சாதனத்தில் ஜிமெயிலைப் பயன் படுத்தும்போது புதிய செய்திகளை அந்தச் சாதனத்தில் காண்பிக்காது. காரணம் அந்தச் சாதனம் இன்னும் சிங்க் செய்யப்படவில்லை.
எனவே அந்தச் சாதனத்தில் ஜிமெயில் கணக்கு சிங்க் செய்யப்பட வேண்டும். எனினும் நீங்கள் எதுவும் செய்வதற்கில்லை. சில நிமிடங்களில் தானாகவே ஜிமெயில் கணக்கு சிங்க் செய்யப்பட்டு புதிய செய்தியைக் காண்பிக்கும்.